பாடத்திட்டம்
தமிழ்நாட்டரசின் சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தோடு ஐநிலைக்கல்வி (UNI5) எனப்படும் நமது மரபு சார்ந்த - அறிவியல், இயற்கை வேளாண்மை, இலக்கியங்கள், சமூக அறிவியல் ஆகியவற்றை நவீன அறிவியல், சமூக அறிவியலுடன் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
மாண்டிசோரி அம்மையாரின் தாய்மொழி மற்றும் செயல்வழி அடிப்படையிலான கல்வியியல் முறையும் கையாளப்படுகிறது.
சிறப்புகள்
கல்வி வளாகம் ஆசிரியர்களின் அதிகார மையமாக இல்லாமல் குழந்தைகளின் சுதந்திரச் செயல்பாட்டு மையமாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறோம். மாணவர்களுக்கு அதிக நேரம் ஓடியாடி விளையாட வாய்ப்பளிக்கிறோம். இயன்றவரை பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்காமல் செயல் வழியில் கற்கத் துணை செய்கிறோம்.
ஒவ்வொன்றுக்கும் உள்ள இடையுறவுகளையும் தொடர்புகளையும் புரிந்துகொள்ள துணை செய்யும் வகையில் கல்வி அளிக்கப்படுகிறது.
ஒரு விதை விதைக்கப்படுவது முதல் அறுவடை செய்யப்படும்வரை மாணவர்கள் தாங்களே அச்செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள். செடி வளர்வதற்குத் தேவையான பயிரூக்கிகள், பூச்சி விரட்டிகளை அவர்களே உருவாக்குகிறார்கள். அவர்களே தெளிக்கிறார்கள். அடுத்தடுத்த ஒவ்வொரு வளர்ச்சி நிலையையும் உற்று நோக்குகிறார்கள். இறுதியில் ஒரு விதை எத்தனை விதைகளை உருவாக்கிவிட்டது என்று எண்ணி வியக்கிறார்கள். ஒருவேளை விதை முளைக்காமல் போனாலோ, செடி தன் முழுவாழ்நாளை எட்டவில்லை என்றாலோ அதற்கானக் காரணத்தைக் கண்டறிய முயல்கிறார்கள். இறுதியில் தாங்கள் செய்தவற்றையும் கண்டறிந்தவற்றையும் செயல் திட்ட அறிக்கை ஆக்குகிறார்கள். இச்செயல்பாடுகளின் ஊடாகவே அறிவியல், கணக்கியல், சமூக அறிவியல், உண்மைகளையும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்கிறார்கள்.
ஒரு மாணவனோ, மாணவியோ 17 வயது வரை பள்ளிகளில்தான் கணிசமான நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு 18 வயது ஆனவுடன் வாக்குரிமை பெற்று சனநாயகக் கடமை ஆற்றும் உரிமை கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர்களுக்கு சனநாயகக் கடமை குறித்த அனுபவ அறிவு கல்விக் கூடங்களில் தரப்படுவதில்லை. அதற்கான செயல்முறைகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்படவில்லை. ஆனால் நமது பள்ளியில் எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த சனநாயகக் கடமை ஆற்றுவதற்கு இப்போதே பயிற்சி அளிக்கிறோம்.
பள்ளி வளாகத்திற்கான முதல் அமைச்சர், கல்வித்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், ஒழுங்குத்துறை மற்றும் உழவுத்துறை அமைச்சர்களை மாணவர்களே வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். வகுப்பறைத் தலைவர்களை குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும் தலைவர்களும் மிக்க மகிழ்ச்சியோடு தங்கள் பணிகளைச் சரிவர செய்கிறார்கள்.
வாரம் ஒருமுறை கூடும் மாணவர் மன்றத்தில் வேலை அறிக்கைகளை முன்வைக்கிறார்கள். மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்கள். தங்களின் அனுபவத்தோடு நில்லாமல் நாட்டில் நடக்கும் தேர்தல்கள், ஆட்சி முறைகள் குறித்தெல்லாம் புதிய புதிய கேள்விகளை எழுப்பி விடை காண்கிறார்கள்.
அதுமட்டுமல்ல இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களோ தலைவர்களோ கடமை தவறினால் வாக்களித்த மாணவர்களே அவர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். மூன்றுமுறை எச்சரிக்கை மணி அடிக்கப்பட்ட அமைச்சரோ தலைவரோ வாக்களித்த மாணவர்களாலேயே பதவி விலக்கப்படுவார். (அதாவது தேர்ந்தெடுக்கவும் தவறிழைத்தால் திருப்பி அழைக்கவுமான வாக்குரிமை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.) அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் நடக்கும். பொறுப்புகளும் வாய்ப்புகளும் கிடைத்தால் எவ்வளவு சிறப்பாகத் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள் சின்னஞ்சிறு மாணவர்கள், என்பது வியப்பாக இருக்கிறது.
எழுத்துத் தேர்வு நடத்துகிறோம் என்றாலும் எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு மாணவர்களின் திறன்களை மதிப்பிடுவது இல்லை.
மாணவர்களின் பல்வகைத் திறன்களை (20 வகைப்பட்டத் திறன்கள்) வளர்த்தெடுக்கத் துணை செய்கிறோம். திறன் பயிற்சிகள் மட்டுமல்லாமல் அவர்களின் குணநலன்கள், பண்பு நலன்கள், ஒழுக்கநெறி, அறநெறி ஆகியவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் முழு கவனம் செலுத்துகிறோம்.
உடற்கல்வி மற்றும் உடற்பயிற்சிக்கு முதன்மை அளிக்கப்படுகிறது. விளையாட்டுக்குப் போதிய நேரம் வழங்கப்படுகிறது. ஓவியம், சிலம்பம் உள்ளிட்ட நமது மரபு சார்ந்த கலைப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
எவ்வளவுதான் மாணவர்களின் கற்றலுக்கு ஆசிரியர்கள் துணை செய்தாலும் வீட்டில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் மாணவர்களின் கற்றல் செயல்பாடு முழுமையடையாது என்பதை உணர்கிறோம். பெற்றோர்களுக்கும் உணர்த்துகிறோம்.