மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அவரவர் தாய்மொழியில் - செயல்வழியில் கல்வி பயிலும் போதுதான் தடையின்றி சிந்திக்கவும் செயல்படவும் முடியும் என்கிற கல்வி அறிவியலை அடிப்படையாகக் கொண்டும், கல்வி அளித்தல் என்பது இலாபம் ஈட்டும் ஒரு தொழிலாக இருக்கக் கூடாது என்கிற சமூகநல அறிவியலை அடிப்படையாகக் கொண்டும் கடந்த 1999-2000-ஆம் கல்வியாண்டில் "முன்மாதிரிப் பள்ளி"யாகத் தொடங்கப்பட்டது தான், பாவாணர் பள்ளி. தமிழுக்காகவும் தமிழ் மக்களின் ஏற்றத்துக்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைத்த மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் பெயரைத் தாங்கி இருப்பது பள்ளிக்குப் பெருமையுடையது. பல்வேறு இடர்ப்பாடுகள் நெருக்கடிகளுக்கு இடையில் 25 ஆண்டுகளைக் கடந்து 2023-2024-ஆம் கல்வியாண்டில் வெள்ளிவிழா கண்டோம். இப்பொழுது 27-வது ஆண்டில் பயணிக்கிறோம். மழலையர் பிரிவு முதல் ஐந்தாம் வகுப்பு வரை எட்டு வகுப்புகளில் 51 மாணவர்கள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட சம்பளம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 6 பேரும் சம்பளம் பெறாத ஆசிரியர்கள் (தன்னார்வலர்கள்) 5 பேர் என மொத்தம் 11 பேர் பணிபுரிகிறார்கள். ஓவிய ஆசிரியரொருவரும், சிலம்ப ஆசிரியரொருவரும் பகுதிநேரமாகப் பணிபுரிகின்றனர்.
நோக்கங்கள்
வணிக நோக்கம் இல்லாமல் சமூக நல நோக்கத்துடன் அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை தாய்மொழியில் கல்வி வழங்குவது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது தமிழ்ப் பழமொழி. இப்போதும் நமது கல்வி முறை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கிறது. இந்த முறையை மாற்றி இயன்றவரை செயல்வழிக்கற்றலுக்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பது.
ஐம்பூதங்களின் சேர்க்கையும் இயக்கமுமே இயற்கை அறிவியலின் அடிப்படை என்கிற நம் மரபுசார்ந்த இயற்கை அறிவியல், இயற்கை வேளாண்மை மற்றும் மரபுசார்ந்த சமூக அறிவியலை இன்றைய நவீன அறிவியல் கோட்பாடுகளோடும், நவீன சமூக அறிவியலோடும் பொருத்திப்பார்த்து, கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட துணைசெய்வது.
ஆசிரியர்களின் அதிகாரத்தை மாணவர்கள் மீது நிறுவாமல் குழந்தைகளுக்கு சுதந்திரமான சூழ்நிலையை உருவாக்கித் தந்து அவர்கள் தடையின்றி கற்க உதவுவது.