வணிக நோக்கம் இல்லாத
தாய்மொழியில் செயல்வழியில் மாற்றுக்கல்வி
இதுவே எங்கள் நோக்கம்!
எங்களைப்பற்றி
நமது பாவாணர் பள்ளி வணிக நோக்கம் இல்லாமல் தாய்மொழியில் செயவழியில் மாற்றுக்கல்வி அளிக்கும் பள்ளி ஆகும். இப்பள்ளி ஜூன் 1, 1999 அன்று தொடங்கப்பட்டது. 2023 - 2024-ஆம் கல்வியாண்டில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளி விழா கண்ட பள்ளியாகும்.
நோக்கம்
கல்வி ஒரு வணிகப் பொருளாகிவிட்ட இன்றைய சூழலில் மாணவர்களுக்கு வணிக நோக்கம் இல்லாமல் தாய்மொழித் தமிழில் வாழ்க்கைக்கான கல்வியை செயல்வழியில் அளிப்பதே பள்ளியின் முதன்மையான நோக்கம் ஆகும்.
பள்ளியின் அமைவிடம்
தமிழ்நாடு, சென்னை 600100, பள்ளிக்கரணை, அஷ்டலட்சுமி அவென்யூ, முதல் தெரு, எண். 1 எனும் முகவரியில் நம் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி நடக்கும் இடம், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சி. எம். டி. ஏ) பள்ளி நடத்துவதற்காகவே ஒதுக்கப்பட்ட இடமாகும்.
அறக்கட்டளை
மேற்சொன்ன முகவரியில் பதிவு செய்யப்பட்ட பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளையால் (பதிவு எண். 117/2004) பள்ளி நடத்தப்படுகிறது. அறக்கட்டளைக்கு வருமான வரித்துறையின் 80G வரிவிலக்குச் சான்று பெறப்பட்டுள்ளது.
என்ன செய்துள்ளோம்?
இதுவரையில், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வணிக நோக்கம் இல்லாமல் தாய்மொழியில் கல்வி அளித்துள்ளோம். இங்கு பயின்று சென்ற மாணவர்கள் மேல்நிலைக் கல்வியைச் சிறப்பாக நிறைவு செய்து, சமூகத்தில் நல்ல நிலையில் உயர்ந்துள்ளனர். இத்தனை ஆண்டுகளில் எமது நோக்கத்தில் இருந்து இம்மியும் விலகாமல் வணிக நோக்கம் இல்லாத தாய்மொழிக் கல்வியை வழங்கி இருக்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம். அதேநேரம் இத்தனை ஆண்டுகளை அவ்வளவு எளிதாக எங்களால் கடந்து வர முடியவில்லை. நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் ஒன்றல்ல இரண்டல்ல. அனைத்தையும் எதிர்கொண்டுதான் பள்ளியை வணிக நோக்கமில்லாமல் தாய்த்தமிழ் வழியில் நடத்தி வருகிறோம்.
எந்த சூழ்நிலையில் பள்ளியைத் தொடங்கினோம்?
பள்ளி தொங்கப்பட்டக் காலத்தில், எங்கு பார்த்தாலும் தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் தொடங்கப்பட்டன. அங்கு தமிழை விடுத்து ஆங்கிலமே பயிற்று மொழியாக ஆக்கப்பட்டது. தாய்மொழியில் அல்லாமல் அந்நிய மொழியான ஆங்கில வழியில் கல்வியை அளிப்பதும், அதுவும் கல்வியை ஒரு விற்பனைப் பண்டமாக ஆக்குவதும் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கு ஏற்றச் செயல்பாடல்ல என்பதை உணர்ந்த நாங்கள், தாய்மொழியில் வணிக நோக்கம் இல்லாமல் கல்வி தரவேண்டும் என்பதற்காகவே பாவாணர் பள்ளியைத் தமிழ்வழியில் தொடங்கினோம்.
வணிக நோக்கமில்லாமல் பள்ளியை நடத்த முடிகிறதா?
ஆம். இத்தனை ஆண்டுகளாக எள்ளளவும் வணிக நோக்கம் இல்லாமல்தான் பள்ளியை நடத்தி வருகிறோம். ஆனால் முற்று முழுதும் உலகச்சந்தையால் சூழப்பட்ட இன்று வணிக நோக்கம் இல்லாமல் அதுவும் தமிழ்நாட்டில் தாய்த்தமிழ் வழியில் கல்வி கொடுப்பது என்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நிறைய சிக்கல்களை எதிர்கொண்டோம்.
என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டோம்?
முதல் சிக்கலே பள்ளி நடத்துவதற்கான இடத்தைத் தேடி அலைந்தது தான். வணிக நோக்கமில்லாமல் பள்ளியை நடத்துவது என்று முடிவெடுத்து விட்ட எங்களால் பள்ளிக்கென சொந்த இடம் வாங்க முடியவில்லை. பெரிய வாடகை கொடுக்கவும் முடியவில்லை. அதனால் குறைந்த வாடகையில் எங்காவது இடம் கிடைக்குமா என்று ஆறு மாதங்களுக்கு மேல் தேடி அலைந்தோம். கடைசியாக நண்பர் ஒருவர் மூலமாக 1200 சதுர அடி நிலம், தரை வாடகைக்குக் கிடைத்தது. தரைவாடகை கொடுத்து அந்த இடத்தில் ஓர் ஓலைக்குடிசையை உருவாக்கினோம்.
மாணவர்கள் சேர்ந்தார்களா?
கடகடவென மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. வணிக நோக்கமில்லாமல் தாய்த்தமிழ் வழியில் கல்வி தருவதற்காக பாவாணர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது என்பதை வீடு வீடாகச் சென்று துண்டறிக்கைகள் மூலமாகவும் வாய்வழியாகவும் மக்களுக்கு விளக்கப் படுத்தினோம். முதல் ஆண்டில் 30 மாணவர்கள் சேர்ந்தனர். அன்றைய நிலையில் அது ஒரு பெரிய வெற்றிதான். ஏனெனில் அப்போது பள்ளிக்கரணையில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில வழித் தனியார்ப் பள்ளிகள் இருந்தன. அந்தப் பள்ளிகளுக்குச் சொந்தமாக பெரிய கட்டட வசதிகள் மற்றும் இடப்பரப்பு இருந்தன. எங்களிடமிருந்தது வெறும் 1200 சதுரடி வாடகை இடமும் அதில் தென்னை ஓலைக் குடிசையும்தான். அத்தகைய சூழலில் தமிழ் வழியில் 30 மாணவர்கள் சேர்க்கப்பட்டது ஒரு பெரிய வெற்றி தானே!
சரி, அடுத்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கைக் கூடியதா?
ஏனென்றால் முதல் ஆண்டு கொடுக்கப்பட்டக் கல்வி சரியாக இருந்திருந்தால்தானே அதற்கடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை கூடியிருக்கும்? ஆம், கூடியது. இரண்டாமாண்டு மாணவர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. எங்கள் வேலை சரியானது என்பதை அது மெய்ப்பித்தது. அதேநேரம் புதிய சிக்கல் தோன்றியது. முதலாண்டு பள்ளி தொடங்கிய இடம் இப்போது இரண்டாமாண்டில் 65 மாணவர்களுக்குப் போதுமானதாக இல்லை. புதிய இடம் தேடி அலைந்தோம். பள்ளிக்கரணையில் மேற்கண்ட முகவரியில் இப்போது பள்ளி நடந்து கொண்டிருக்கும் இடம் கிடைத்தது. அப்போது அந்த இடத்தில் ஏற்கெனவே ஓர் ஆங்கிலவழிப்பள்ளி நடத்தப் பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுப் புதர் மண்டிக் கிடந்தது. அந்த இடத்தின் உரிமையாளர் என்று அப்போது எங்களிடம் சொல்லிக் கொண்டவரிடம் அவ்விடத்தை வாடகைக்கு எடுத்து முட்புதர்களையெல்லாம் அகற்றிவிட்டு அங்கிருந்த மிகப்பழைய தார் அட்டை போட்ட கட்டடத்தில் பள்ளியைத் தொடர்ந்து நடத்தத் தொடங்கினோம். மூன்றாவது ஆண்டில் 100 மாணவர்கள், நான்காவது ஆண்டில் 140 மாணவர்கள் என மாணவர் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே போனது. முதல் ஆண்டு விழாவில் அம்மா தாமரை பெருஞ்சித்திரனார், ஐயா மா. செ. தமிழ்மணி, ஐயா சா. சந்திரேசன் ஆகியோரும், இரண்டாவது ஆண்டு விழாவில் பேராசிரியர். மா. நன்னன் மற்றும் பேராசிரியை வசந்தா கந்தசாமி ஆகியோரும், மூன்றாம் ஆண்டு விழாவில் வலம்புரி ஜான், பேரா. கு. அரசேந்திரன் ஆகியோரும் நான்காவது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் மகிழ்திருமேனி, பாடகர் புட்பவனம் குப்புசாமி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டித் திடப்பட்டுக் கொண்டிருந்தது.
வந்தது அடுத்த சிக்கல்
ஆனால் அதற்குள் அடுத்த சிக்கல் தொடங்கிவிட்டது. பள்ளி நடக்கும் இடத்தின் உரிமையாளர் என்று சொல்லிக் கொண்டு வாடகைக்கு விட்டவர், நான்காவது ஆண்டு விழாவிற்கு வந்திருந்தார். அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து பள்ளி இடத்தைக் காலி செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கத் தொடங்கி விட்டார். என்ன காரணம் என்று கேட்டோம். இடத்தை விற்கப் போகிறேன் என்றார். அப்படியானால் நாங்களே வாங்கிக் கொள்கிறோமே என்றோம். உங்களால் வாங்க முடியுமா என்று கேட்டார். விலை சொல்லுங்கள் என்றோம். அந்த இடம் 10,200 சதுரஅடி அளவு கொண்டது. மொத்தம் 44 இலட்ச ரூபாய் என்று சொன்னார். ஆனால் அன்றைய சந்தை மதிப்பு அதைவிடப் பலமடங்கு குறைவுதான். சரி, ஒருமாத காலம் கொடுங்கள் முன்பணம் ஏற்பாடு செய்துகொண்டு வருகிறோம் என்றோம். முன்பணம் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நன்கொடை திரட்டி பள்ளிக்கான இடத்தை வாங்குவது என முடிவெடுத்தோம். ஆனால் அதற்கு அவர் வழிவிடவில்லை. ஒருசில நாட்களில் தொலைபேசி செய்து இடத்தை உங்களுக்குத் தரவில்லை, நீங்கள் விரைவாகக் காலி செய்து விடுங்கள் என்றார். என்ன காரணம் என்று கேட்டோம். காரணம் எல்லாம் சொல்லத் தேவையில்லை, காலி செய்யச் சொன்னால் செய்யுங்கள் என்றார். சரிங்க, ஓராண்டு காலம் கொடுங்கள் வேறு இடம் பார்த்துக் கொண்டு செல்கிறோம், என்றோம். முடியாது உடனே காலிசெய்யுங்கள் என்றார். மூன்று மாதமாவது கொடுங்கள் என்றோம். அதெல்லாம் முடியாது ஒரு மாதத்தில் காலிசெய்யுங்கள் என்றார். ஒன்றும் புரியவில்லை எங்களுக்கு. அவர் எங்களிடம் பேசியது ஜனவரி 2004. ஒரு சில மாதங்களில் ஆண்டுத்தேர்வு நடத்த வேண்டும். திடுமெனக் காலி செய்யச் சொன்னால் என்ன செய்வது? ஏன் இவர் முதலில் நமக்கு விற்பதாகச் சொல்லிவிட்டு பிறகு முடியாது காலி செய்யுங்கள் என்கிறார். அதுவும் ஒரு மாதத்திற்குள். ஒரு வீட்டைக் காலி செய்வதற்குக் கூட மூன்று மாத காலம் தருவார்கள்? இவர் ஒரே மாதத்தில் பள்ளியைக் காலி செய்யச் சொல்கிறாரே. கல்வி ஆண்டின் இறுதியில் தேர்வுகள் நடத்த வேண்டிய நேரத்தில் ஒரு பள்ளியைக் காலி செய்யச் சொன்னால் எப்படி செய்ய முடியும்?
பள்ளி நடத்துவதற்காகவே ஒதுக்கப்பட்ட இடம்
இந்தக் கேள்விகளும் நெருக்கடிகளும் எங்களை நெட்டித் தள்ளின. அங்கிருந்த சிலரிடம் கேட்டபோதுதான் எங்களுக்கு விடை கிடைத்தது. பள்ளி நடக்கும் அந்த இடம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சி.எம்.டி.ஏ) பள்ளி நடத்துவதற்காகவே ஒதுக்கப்பட்ட இடம் என்றும் பள்ளியைக் காலிசெய்து தன்னிடம் கொடுத்தால், அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிப் பெரும்பணம் சம்பாதிக்கலாம் என்றும் ஓர் அரசியல்வாதி சொல்லி இருப்பதாகவும் அதற்காகத் தான் உங்களைக் காலிசெய்யச் சொல்கிறார்கள் என்றும் அவர்களை எதிர்த்துக்கொண்டு உங்களால் ஒன்றும் செய்யமுடியாது, வேறு வழி இல்லை காலி செய்து விடுங்கள் என்றும் அவர்கள் சொன்னபிறகுதான் எங்களுக்கு உண்மை விளங்கியது. அது பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பதும், பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக வீட்டு மனைகளாக மாற்றி பெரிய இலாபம் சம்பாதிப்பதற்காகவே பள்ளியைக் காலி செய்யச் சொல்கிறார்கள் என்பதும் விளங்கியது. நீங்கள் காலி செய்யாவிட்டால் அரம்பர்களை (ரவுடிகளை) வைத்துக் காலிசெய்து விடுவார்கள் என்றும் அந்த ஆட்கள் சொல்லவே நாங்கள் வேறு வழியின்றி வழக்குரைஞர்களின் துணையை நாடினோம். வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தை நாடுங்கள் என்றனர். வழக்குரைஞர்களின் ஆலோசனைப்படி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டுமனைகளாக மாற்றம் செய்யக் கூடாது என்றும் சட்டத்திற்குப் புறம்பாக பாவாணர் பள்ளியைக் காலிசெய்யக்கூடாது என்றும் இடைக்காலத் தடையாணை பெற்றோம்.
உரிமையாளர் எனச் சொல்லிக்கொண்டவர் உரிமையாளர் இல்லை!
அந்த வழக்கில் இடத்தின் உரிமையாளர் என்று முன்பு எங்களிடம் சொல்லிக் கொண்டவர், தான் உண்மையான உரிமையாளர் அல்ல என்றும் தான் ஒரு அதிகார முகவர் (பவர் ஆப் அட்டர்னி) மட்டுமே என்றும் பதில் மனுத்தாக்கல் செய்த பிறகுதான் அந்த உண்மையும் எங்களுக்குத் தெரிய வந்தது. என்னடா இது சிக்கலுக்குமேல் சிக்கலாக இருக்கிறதே என்று நாங்கள் எண்ணிக் கொண்டிருக்க, இதற்கிடையில் நாங்கள் வாங்கியிருந்த இடைக்காலத் தடையாணையும் நீக்கம் செய்யப்பட்டு விட்டது. அதற்கடுத்து உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துவிட்டு பள்ளியை நடத்துவதில் கவனம் செலுத்தினோம். ஆனாலும் பள்ளியை நடத்துவதில் எங்கள் கவனம் செல்லாதபடிக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள், காவல் துறையினரின் மிரட்டல்கள், காவல் நிலையத்தில் ஆய்வாளரே எங்களை அழைத்து நேரடியாக மிரட்டியது, வெளியில் சில அரசியல் புள்ளிகளின் மிரட்டல்கள், அரம்பர்களின் மிரட்டல்கள் என அடுத்தடுத்து தொடர் நெருக்கடிகளைச் சந்தித்தோம்.
கும்பகோணம் தீ விபத்து
இதற்கிடையில் கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு குழந்தைகள் இறந்து போன அந்தக் கொடூரமான நிகழ்வு நடந்தது. எங்கள் பள்ளிக் கட்டடத்தை சரி செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு மக்களிடம் சில இலட்சம் ரூபாயை நன்கொடை திரட்டி மூங்கில் கம்புகளில் தார் அட்டை வேயப்பட்ட பழைய கட்டடத்தைத் தீப்பிடிக்காத இரும்புக் குழாய்களில் கல்நார் அட்டை வேயப்பட்ட கட்டடமாக மாற்றி அமைத்தோம். அதற்கும் ஆயிரம் நெருக்கடிகள். எப்படியோ சமாளித்து அந்த வேலையைச் செய்து முடித்தோம். மறுபடியும் மறுபடியும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் காவல் துறையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. அவற்றையெல்லாம் மக்கள் துணையுடன் முறியடித்தோம். இதற்கிடையில் மாணவர்கள் எண்ணிக்கை 180-ஐத் தொட்டுவிட்டது. ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆண்டு விழாக்களையும் சிறப்பாக நடத்தி முடித்தோம். ஐந்தாவது ஆண்டு விழாவில் ஐ. ஏ. எஸ் அலுவலர் கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களும், ஆறாவது ஆண்டு விழாவில் பேராசிரியர் இறையனார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆனாலும் ஐந்தாவது ஆண்டையும் ஆறாவது ஆண்டையும் அவ்வளவு எளிதாக எங்களால் கடந்து வர முடியவில்லை. நிறைய தொல்லைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானோம். குறிப்பாக பள்ளிக்கரணை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் வீரமணி என்பவரால் காவல் நிலையத்திற்கு அடிக்கடி அழைக்கப்பட்டு தொடர் மிரட்டலுக்கு உள்ளானோம். ஜூன் 2005-ல் ஏழாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தோம்.
பள்ளிக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது!
ஜூலை 19, 2005.
அந்தக் கொடூரம் நிகழ்ந்த நாள். ஆம் மொத்த அரசு எந்திரமும் அரம்பர்களும் கூட்டு சேர்ந்து பாவாணர் பள்ளிக் கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கிய நாள். அன்று முற்பகல் காஞ்சிபுரத்திலிருந்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருடன் இடத்தின் உரிமையாளர் என்று முதலிலும் பின்னர் 'அதிகார முகவர்' என்றும் சொல்லிக் கொண்ட ஆள் வருகிறார். அவருக்கும் எங்களுக்கும் வழக்கு நடப்பதால் அவரை பள்ளி வளாகத்திற்குள் நாங்கள் அனுமதிக்கவில்லை. கல்வி அலுவலரை மட்டும் அனுமதித்தோம். பள்ளி வளாகத்திற்குள் வந்த கல்வி அலுவலர், இட உரிமையாளருக்குத் தெரியாமல் பள்ளி நடப்பதாகவும் பள்ளிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரிப்பதற்காகத் தான் வந்திருப்பதாகவும் கூறினார். அந்தப் புகாரில் உண்மை இல்லை என்றும் அவருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையே வழக்கு நடப்பதாகவும் உள்நோக்கத்தோடு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நாங்கள் அளித்தப் பதிலை ஏற்றுக் கொண்ட கல்வி அலுவலர் பள்ளியைப் பார்வையிட்டு பார்வையாளர் பதிவேட்டில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துவிட்டுச் சென்று விட்டார். மாலை 4:30 மணி இருக்கும். பள்ளிக்கரணை காவல் நிலையத்திலிருந்து தலைமைக் காவலர் (ஐ. எஸ்.) இராஜ்குமார் என்பவர் வந்தார். என்ன செய்தி என்று கேட்டோம். பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் பயில்கிறார்கள், எவ்வளவு ஆசிரியர்கள் பணி செய்கிறார்கள் என்று கேட்டார். எதற்காகக் கேட்கிறீர்கள் என்று கேட்டோம். 'சும்மாதான்' என்று மழுப்பலாகப் பதில் அளித்துவிட்டு சென்றுவிட்டார். அவரிடமும் அவர் வந்த நோக்கத்தை பார்வையாளர் பதிவேட்டில் பதிவு செய்யுங்கள் என்று கேட்டுப் பதிவு செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரே குழப்பம். என்றைக்கும் வராத கல்வி அலுவலர் வருகிறார். அன்று மாலையே தலைமைக் காவலர் வந்து விசாரித்துவிட்டுச் செல்கிறார். என்னவென்று விளங்கவில்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தோம். தலைமைக் காவலர் சென்ற ஒரு மணி நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட அரம்பர்கள் 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் புடைசூழ வருகிறார்கள். தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மட்டும் பள்ளி முடிந்து மாணவர்களை அனுப்பி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது. பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் வீரமணி பள்ளிக்குள் வந்து தலைமை ஆசிரியரிடம், "உங்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, பள்ளியைக் காலி செய்ய வந்திருக்கிறோம்” என்றார். நாங்கள் தானே வழக்குப் போட்டிருக்கிறோம் எங்களுக்குத் தெரியாமல் எங்களுக்கு எதிராகத் தீர்ப்பா? இருக்கவே வாய்ப்பில்லை தீர்ப்பு நகலை கொடுங்கள் என்று கேட்டோம். தீர்ப்பு நகலைத் தர மறுத்துவிட்டார் ஆய்வாளர். வழக்குரைஞரிடம் தொலைபேசி செய்து கேட்டோம். அவர் நமக்கு எதிராக எந்த ஆணையும் வந்திருக்க வாய்ப்பில்லை என்றார். ஒரு பக்கம் ஆய்வாளரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே ஆய்வாளரோடு வந்திருந்த அரம்பர்கள் பள்ளியில் இருந்த நாற்காலி மேசைகளை எல்லாம் ஒரு சுமையுந்தில் (லாரியில்) அள்ளிப் போட்டார்கள். தடுக்கச்சென்ற தலைமையாசிரியையும் ஆசிரியைகளையும் காவலர்கள் பிடித்துக் கொண்டனர். பள்ளியில் இருந்த பதிவேடுகள், ஆவணங்கள், புத்தகங்கள் என அனைத்தையும் சூறையாடினர். காவலர்களின் நேரடி பாதுகாப்பில் ஒரு கொள்ளைச் சம்பவம் எங்கள் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்களில் பின்பக்கம் இருந்து ஒரு ஜே.சி.பி எந்திரம் உள்ளே நுழைந்தது. முதலில் கழிப்பறையை இடித்துத் தள்ளினார்கள். அடுத்து பள்ளி வளாகத்திற்குள் குடிநீர் பயன்பாட்டுக்காக மாணவர்கள் நெருங்காமல் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கம்பி வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றின் சுற்றுச்சுவரை இடித்துக் கிணற்றுக்குள் தள்ளினார்கள். பிறகு பள்ளி வளாகத்திற்குள் இருந்த தென்னை மரங்களையும் மாமரங்களையும் வேரோடு பிடுங்கி கிணற்றுக்குள் வீசினார்கள்.
பள்ளிக் கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்பு
அடுத்து, பள்ளிக் கட்டடம்
ஆம். அடுத்து, பள்ளி கட்டடத்தையும் மடமடவென இடித்துக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டார்கள். ஒரு மணி நேரத்திற்குள் மொத்தமும் முடிந்து விட்டது. ஒருபக்கம் பள்ளியின் பொருட்களை எல்லாம் அரம்பர்கள் சூறையாட இன்னொருபக்கம் பள்ளிக் கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கி கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள். இதையெல்லாம் தடுக்க முடியாதபடிக்கு ஆசிரியர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கொண்டனர். முழுக்க முழுக்க காவல்துறைப் பாதுகாப்புடன் அந்த கொடூர நிகழ்வு எங்கள் கண்முன்னே நிகழ்த்தப்பட்டது. படுபாவிகளின் அந்த வெறிச்செயலை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. அரம்பர்கள் அட்டூழியம் செய்தால் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். காவலர்களே அரம்பர்கள் ஆனால்? ஆம் அன்று காவலர்களே அரம்பர்கள் ஆனார்கள்! அதற்குள் செய்தியறிந்து பொதுமக்களும் பெற்றோர்களும் சனநாயக சக்திகளும் தமிழ் உணர்வாளர்களும் நூற்றுக்கணக்கில் கூடி விட்டனர். காவல் ஆய்வாளர் வீரமணியை சூழ்ந்துகொண்டு நீதிமன்ற ஆணையைக் காட்டச் சொல்லிக் கேட்டார்கள். நாங்கள் கேட்டபோது தரமறுத்த ஆய்வாளர் மக்கள்திரள் முன்பு வேறு வழியின்றி பணிந்தார். நீதிமன்ற ஆணையைக் காட்டினார். வாங்கிப்படித்துப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தோம். மக்களின் சினம் எல்லை கடந்துவிட்டது.
நீதிமன்ற ஆணையில் என்ன இருந்தது?
பள்ளி நடக்கும் இடத்தின் முகவரி மட்டும் இருந்தது. பள்ளியின் பெயர் கூட இல்லை. அந்த இடத்திற்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கச் சொல்லி ஆணையிடப்பட்டு இருந்தது. அதுவும் நாங்கள் போட்டிருந்த வழக்கல்ல. எங்களுக்குத் தெரியாமல் வேறு ஒரு வழக்குபோட்டு நீதிமன்றத்தை ஏமாற்றி, திருட்டுத் தனமாக தீர்ப்பு வாங்கி இருக்கிறார்கள் என்று மட்டும் அப்போது தெரிந்தது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மிகப்பெரும் அநியாயம் நடந்து விட்டது என்பதை உணர்கிறார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் கோபக்கனல் வீசியது. ஜே.சி.பி எந்திரத்தின் முகப்புக் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். எந்திரத்தின் டயரில் இருந்த காற்றைப் பிடுங்கி விட்டார்கள். பயந்து போன ஜே.சி.பி. ஓட்டுநர் ஓட்டம் பிடித்துவிட்டார். மக்கள் போராட்டத்தைக் கண்ட அரம்பர்களும் பிடறி தெறிக்க ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்த காவல் ஆய்வாளர் வீரமணியும் அவரது காவலர்களும் மெல்ல வெளியேறப் பார்த்தார்கள். மக்கள் விடவில்லை. காவலர்களைச் சூழ்ந்துகொண்டனர். நியாயம் கிடைக்காமல் அங்கிருந்து வெளியேற விடமாட்டோம் என்றனர். வேறு வழியின்றி ஆய்வாளர் வீரமணி மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையருக்கு தொலைபேசி செய்தார். சிறிது நேரத்தில் அங்கே காவல் உதவி ஆணையர் மகேந்திர ரத்தோர் வந்தார். நடந்ததையெல்லாம் கேட்டறிந்துவிட்டு, ஏன் இப்படி செய்தீர்கள் என்று ஆய்வாளர் வீரமணியைக் கடிந்து கொண்டார். தப்பு நடந்துவிட்டது. இரவாகிவிட்டதால் நாளை பேசிக் கொள்ளலாம் என்று பொதுமக்களிடம் சமாதானம் பேசி காவல் ஆய்வாளரையும் காவலர்களையும் அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
பள்ளிக் கட்டடத்தை இடிப்பதற்காக எதிரிகள் போட்ட பொய் வழக்கு என்ன தெரியுமா?
பாவாணர் பள்ளியை சட்டத்திற்குப் புறம்பாகக் காலி செய்யக் கூடாது எனவும் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டுமனையாக மாற்றக்கூடாது எனவும் பள்ளி அறக்கட்டளை சார்பில் முதன் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ரிட்' மனுத்தாக்கல் செய்து இடைக்காலத் தடையாணை பெற்றோம் அல்லவா? பள்ளிக்கு இடைக்காலத் தடையாணைக் கிடைத்து விட்டதை அறிந்த எதிராளிகள் உடனடியாக ஒரு தந்திரம் செய்தார்கள். அதாவது இப்பொழுது பாவாணர் பள்ளி நடக்கும் இடத்தில் முன்பொரு காலத்தில் ஆங்கிலவழிப் பள்ளி நடத்திக் கொண்டிருந்த ஆளை அழைத்து ஒரு உரிமையியல் வழக்கு போட வைக்கிறார்கள். (அவர் வேறு யாருமல்ல. முதலில் பள்ளி இடத்தின் உரிமையாளர் என்றும் பின்னர் தான் உரிமையாளர் இல்லை வெறும் அதிகார முகவர்தான் என்றும் சொல்லிக் கொண்டவரின் சகலை தான் அவர்!). உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அந்த வழக்கில், “அந்த ஆங்கில வழிப் பள்ளியை நடத்தியவர் இப்போதும், அதாவது 2004-ஆம் ஆண்டிலும், பாவாணர் பள்ளி நடக்கும் அதே இடத்தில் ‘இந்து வித்யாலயா' என்னும் ஆங்கிலவழிப் பள்ளியை நடத்தி வருவதாகவும், அந்த ஆங்கிலவழிப் பள்ளியைச் சட்டத்திற்குப் புறம்பாகக் காலி செய்யச் சொல்லி இடத்தின் உரிமையாளர் என்று சொல்லிக் கொள்பவர் மிரட்டுவதாகவும் சட்டத்திற்குப் புறம்பாக அந்த ஆங்கிலவழிப் பள்ளியை காலி செய்யக்கூடாது எனவும், பள்ளிக்குக் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமெனவும்” கோரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் (பல ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்டு விட்ட) “அந்த ஆங்கில வழிப் பள்ளியைச் சட்டத்திற்குப் புறம்பாகக் காலி செய்யக் கூடாது எனவும், அந்தப் பள்ளிக்கு காவல்துறை பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் எனவும்”, இடைக்கால ஆணையிட்டுள்ளது. அந்த ஆணையை எடுத்துக் கொண்டு ஓடி வந்துதான் அரம்பர்களும் பள்ளிக்கரணை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவலர்களும் கூட்டு சேர்ந்து பாவாணர் பள்ளிக் கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கினர். இதில் கொடுமை என்னவென்றால் 2000–2001-ஆம் கல்வியாண்டிலிருந்து அந்த இடத்தில் நடந்து வரும் பாவாணர் பள்ளிக்கு உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையாணையை நீக்கிவிட்டு எங்களுக்குத் தெரியாமல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கில் அப்போது பாவாணர் பள்ளி நடந்து கொண்டிருந்த உண்மையை மூடிமறைத்துவிட்டு ஏற்கெனவே மூடப்பட்டுவிட்ட ஆங்கில வழிப் பள்ளி அப்போது நடப்பதாக அப்பட்டமாகப் பொய் சொல்லி, ஒரு வாடகை ஒப்பந்தப் பத்திரமும் போலியாக உருவாக்கி, இடைக்காலத் தடையாணையும் காவல்துறை பாதுகாப்பும் பெற்றுவிட்டனர் எதிராளிகள். சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் பெற்றிருந்த இடைக்காலத் தடையாணை நீக்கம் செய்யப்பட்ட பிறகு, நாங்கள் எந்த உரிமையியல் நீதிமன்றத்தில் பாவாணர் பள்ளியைச் சட்டத்திற்குப் புறம்பாகக் காலி செய்யக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்து இருந்தோமோ, அதே நீதிமன்றத்தில்தான் எதிராளிகளும் மூடப்பட்டுவிட்ட ‘இந்து வித்யாலயா' பள்ளிக்குப் பாதுகாப்பு கேட்டு வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடையாணையும் பெற்றுள்ளார்கள். ஆனால் அப்படி ஒரு வழக்கு நடந்தது, பள்ளி இடிக்கப்படும் வரை எங்களுக்குத் தெரியாது. இப்படி ஒரு பொய்யான, போலியான வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் போடப்பட்டு நடந்து கொண்டிருந்த செய்தி துளியளவும் எங்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டனர் எதிராளிகளும் காவல்துறையினரும். பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்ட அன்று ஆய்வாளர் வீரமணி காட்டிய நீதிமன்ற ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்த வழக்கு எண்ணை அடிப்படையாக வைத்து மறுநாள் உரிமையியல் நீதிமன்றம் சென்று ஆவணங்களைப் பார்த்த பிறகுதான் இவ்வளவு உண்மையும் எங்களுக்குத் தெரியவந்தது என்பதுதான் கொடுமை! பின்னர் அந்த இடத்தில் இப்போது பாவாணர் பள்ளிதான் நடந்து கொண்டிருக்கிறது. எதிராளிகள் உண்மைகளை மறைத்து நீதிமன்றத்தை ஏமாற்றி இப்படி ஒரு இடைக்காலத் தடையாணை பெற்று காவல்துறை பாதுகாப்பும் பெற்று காவல்துறை உதவியுடன் பாவாணர் பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டார்கள். எங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றம் கேட்கவேண்டும். அதற்கு இந்த வழக்கில் பாவாணர் பள்ளியை ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனுச்செய்தோம். நீதிமன்றமும் மனுவை ஏற்றுக்கொண்டது. ஒரு குறிப்பிட்ட காலம் வழக்கு நடந்தது. ஆனால் அந்த வழக்கைத் தொடுத்த, முன்னர் ஆங்கில வழிப் பள்ளியை நடத்தியவர் வழக்கைத் தொடர்ந்து நடத்த விருப்பமில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு பின் வாங்கிக் கொண்டார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. பாவாணர் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு பள்ளியை அந்த இடத்திலிருந்து காலி செய்து விரட்டி விட வேண்டும் என்பதற்காகத்தானே அப்படி ஒரு வழக்கைப் போட்டார்கள். அந்த நோக்கம் நிறைவேறாமல் போகவே வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். அவர்கள் எண்ணத்தில் பாதி நிறைவேறியது. அதாவது பாவாணர் பள்ளியில் இருந்த பொருட்களை காவல்துறை பாதுகாப்போடு சூறையாடுவது, கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்குவது என்கிற அவர்களின் பாதி எண்ணம் நிறைவேறியது. ஆனால் மீதி எண்ணம் நிறைவேறவில்லை. பள்ளியை சட்டத்திற்குப் புறம்பாக அந்த இடத்திலிருந்து காலி செய்ய முடியவில்லை. அவர்களின் எண்ணத்தில் பாதியை நிறைவேற்றிக்கொள்ள துணை நின்றவர்கள் அரம்பர்களும் அரம்பர்களை விடக் கொடுமையான அன்றைய பள்ளிக்கரணை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினரும்தான். எதிராளிகளின் எண்ணத்தில் மீதியை நிறைவேறவிடாமல் தடுத்தது நியாயத்தின் பக்கம் நின்று போராடிய பெற்றோர்களும் பொதுமக்களும் சனநாயக சக்திகளும் தமிழ் உணர்வாளர்களுமே! எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கும் அவர்களின் துணையுடன்தான் இப்போதும் பாவாணர் பள்ளி நடந்து கொண்டிருக்கிறது. வெள்ளி விழா ஆண்டையும் நிறைவு செய்துள்ளது. அன்றிரவு பள்ளி இடிக்கப்பட்ட செய்தி 'சன்' தொலைக்காட்சியின் மூலம் தமிழ்நாடெங்கும் பரவிவிட்டது.
சாலைமறியல் - தடியடி
மறுநாள் ஜூலை 20, 2005
தொலைக்காட்சி வழியாக செய்தியறிந்த தமிழ் உணர்வாளர்களும் சனநாயக சக்திகளும் பள்ளிக்கு வந்து விட்டனர். நியாயம் வேண்டி சாலைமறியல் நடத்துவது என முடிவெடுத்தனர். பள்ளிக்கரணை குளக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சாலைமறியல் நடந்தது. முதல் நாள் சமாதானம் பேசி அழைத்துச் சென்ற காவல் உதவி ஆணையர் மகேந்திர ரத்தோர் தலைமையில் வந்த காவல்துறையினர் சாலை மறியல் செய்த பொதுமக்கள் மீதும் தமிழ் உணர்வாளர்கள் மீதும் தடியடி நடத்திக் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். 28 பேர்மீது வழக்கு போடப்பட்டது. அவர்களில் அன்றைய தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பான தமிழ்வழிக் கல்விக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் அம்மா இறை. பொற்கொடி, பாவாணர் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்க்கண்மணி, ஆசிரியை சித்ரா, பெற்றோர் ராகினி உள்ளிட்ட நான்கு பேர் பெண்கள்.
28 பேர் மீதும் என்ன வழக்கு போடப்பட்டது தெரியுமா?
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு. அதுவும் பிணையில் வெளிவர முடியாத வழக்கு! பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்களாம்! எந்த பொதுச் சொத்துக்கு? ஜே. சி. பி. எந்திரம் எனும் பொதுச் சொத்துக்கு! எந்த ஜேசிபி எந்திரம்? மக்கள் சொத்தான - பொதுச் சொத்தான பாவாணர் பள்ளியை இடித்த ஜே.சி.பி எந்திரம் பொதுச்சொத்தாம்! அந்த ஜே.சி.பி இயந்திரத்தை சேதப்படுத்தியதற்காக 28 பேர் மீது பிணையில் வெளிவர முடியாத இரண்டு வழக்குகள்!
தமிழ்வழி கல்வியைக் காக்க தமிழ்வழிப் பள்ளியைக் காக்க
நீதி கேட்டுச் சிறைசென்ற செம்மல்கள்
திரு. இறை. பொற்கொடி (ஒருங்கிணைப்பாளர், அன்றைய தமிழ்வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பான தமிழ்வழிக் கல்விக் கழகம்)
திரு. தமிழ்க் கண்மணி (முதல்வர், பாவாணர் தமிழ்வழிப் பள்ளி)
திரு. சித்ரா (ஆசிரியர், பாவாணர் தமிழ்வழிப் பள்ளி)
திரு. ராகினி (பாவாணர் தமிழ்வழிப் பள்ளி பெற்றோர்)
திரு. தமிழ்ப் பாரி (பாவலரேறு தமிழ்வழிப் பள்ளி, புதுப்பட்டினம்)
திரு. இரவி (பொதுநல உணர்வாளர், பள்ளிக்கரணை)
திரு. பிரகாஷ் (பாவாணர் தமிழ்வழிப் பள்ளி, மாணவரின் பெற்றோர்)
திரு. முனியன் (பொதுநல ஆர்வலர், நங்கநல்லூர்)
திரு. சேகர் (பொதுநல ஆர்வலர், பள்ளிக்கரணை)
திரு. இராசு (சனநாயக ஆர்வலர், சாபர்கான் பேட்டை)
திரு. சங்கர் (சனநாயக ஆர்வலர், பள்ளிக்கரணை)
திரு. தியாகு (சனநாயக ஆர்வலர், சாபர்கான் பேட்டை)
திரு. சரவணன் (பொதுநல உணர்வாளர். பள்ளிக்கரணை)
திரு. ஜெகதீஷ் (பொதுநல ஆர்வலர், பள்ளிக்கரணை)
திரு. இராசு (பாவாணர் தமிழ்வழிப் பள்ளி, மாணவரின் பெற்றோர்)
திரு. சிவா (சனநாயக ஆர்வலர், சாபர்கான் பேட்டை)
திரு. தமிழ் மகிழ்நன் (தமிழ் உணர்வாளர், திருக்கழுக்குன்றம்)
திரு. ஜெய்சங்கர் (பாவாணர் தமிழ்வழிப் பள்ளி, மாணவரின் பெற்றோர்)
திரு. அறிவன் (தமிழ் உணர்வாளர், புதுச்சேரி)
திரு. கௌதம் (பொதுநல ஆர்வலர், பள்ளிக்கரணை)
திரு. பிராங்க்ளின் (பொதுநல ஆர்வலர், பள்ளிக்கரணை)
திரு. மாயவன் (பாவாணர் தமிழ்வழிப் பள்ளி, மாணவரின் பெற்றோர்)
திரு. இராசு (பொதுநல ஆர்வலர், பள்ளிக்கரணை)
திரு. செல்வகுமார் (பொதுநல ஆர்வலர், பள்ளிக்கரணை)
திரு. இரமேஷ் (பொதுநல ஆர்வலர், பள்ளிக்கரணை)
திரு. ஏதுசாமி (அறங்காவலர், பள்ளி அறக்கட்டளை)
திரு. பிரெடரிக் (அறங்காவலர், பள்ளி அறக்கட்டளை)
திரு. குழல் (பாவாணர் தமிழ்வழிப் பள்ளி, ஆசிரியர்)
இந்த அநியாயத்தைப் பார்த்தீர்களா?
மக்களுக்காக மக்களிடம் நன்கொடை திரட்டிக் கட்டப்பட்ட பொதுச் சொத்தான பள்ளிக் கட்டடத்தை இடித்தவர்கள் மீதோ இடிப்பதற்குத் துணை நின்று பாதுகாப்பு வழங்கிய காவல் துறையினர் மீதோ ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. (இன்று வரையும் அதுதான் நிலைமை!) ஆனால் பொதுச்சொத்தான பள்ளிக் கட்டடத்தை இடித்தத் தனி முதலாளி ஒருவரின் ஜே.சி.பி எந்திரம் அவர்களுக்குப் பொதுச் சொத்தாம்!
28 பேரும் 7 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு அதன் பிறகு பிணையலில் வெளியே விடப்பட்டார்கள். செங்கல்பட்டு மாவட்ட அன்றைய நீதிபதி திரு. அக்பர் அலி அவர்கள் காவல்துறையின் கொடூரத்தைக் கண்டு கொதித்து போய் காவலர்களைக் கடுமையாகக் கண்டித்தார். அவர்தான் 28 பேருக்கும் பிணையல் வழங்கினார். பள்ளிக் கட்டடம் முற்றிலும் இடிக்கப்பட்ட நிலையில் தலைமையாசிரியை மற்றும் இரண்டு ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில் அடுத்து என்ன செய்வது? பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதா? கட்டடம் இல்லாமல் எப்படி நடத்துவது? பெற்றோர்களும் பொதுமக்களும் சேர்ந்து உடனடியாக மறுநாளே துணிப்பந்தல் அமைத்துக் கொடுத்தார்கள்.
இப்போதைக்கு துணிப்பந்தலில் பள்ளியை நடத்துங்கள். ஒரு சில மாதங்களுக்குள் நன்கொடை திரட்டித் தருகிறோம். கட்டடம் கட்டி அதில் பள்ளியை நடத்துவோம் என்று ஊக்கம் அளித்தார்கள். பெற்றோர்களின் விருப்பப்படியே அவர்கள் அமைத்துக் கொடுத்த துணிப்பந்தலில் மற்ற ஆசிரியர்களைக் கொண்டு பள்ளி இடிக்கப்பட்ட மறுநாளில் இருந்தே மாணவர்களுக்கு இடைவிடாமல் பாடங்கள் சொல்லித் தந்தோம். மற்ற தமிழ்வழிப் பள்ளிகளில் இருந்துவந்த பொறுப்பாளர்களும் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தனர். கட்டடம் தான் இல்லையே தலைமை ஆசிரியையையும் இரண்டு ஆசிரியர்களையும் சிறையில் அடைத்து விட்டோமே எப்படி பள்ளி நடத்துவார்கள் என்று எண்ணியிருந்த காவல்துறையினர் மற்றும் அரம்பர்கள் முகத்தில் கரி பூசப்பட்டது. பள்ளி ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க வழக்குரைஞர்களின் ஆலோசனைப்படி பள்ளி இடிப்புக்கு நியாயம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ரிட்' மனுத் தாக்கல் செய்தோம். பெரிய எதிர்பார்ப்புடன் நீதிமன்றத்தின் படி ஏறி நியாயம் கிடைக்கும் என்று நீதிமன்ற அறையில் காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. தீர்ப்பு நியாயமாக இல்லை. இயற்கை நீதிக்குப் புறம்பானதாக இருந்தது. பள்ளிக் கட்டடத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்ககுப் பதிலாக, "கட்டடத்தைத்தான் இடித்து விட்டார்களே, கட்டடம் இல்லாமல் எப்படி பள்ளி நடத்த முடியும்?” என்று கேட்டார், தனி நீதிபதி. பள்ளியை இடித்து விட்டால் மாணவர்களை விரட்டியடித்து விடலாம் என்று எண்ணிய எதிராளிகளுக்கு இந்த ஆணை சாதகமாக அமைந்தது. ஆனால் பள்ளியை இடித்து விட்டாலும் மக்கள் அரம்பர்களை விரட்டி அடித்தார்கள். துணிப்பந்தல் போட்டுக் கொடுத்து பள்ளியை நடத்த ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். எதிரிகள் திகைத்து நின்றனர். ஆனால் நீதிமன்றமோ பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு நியாயம் வழங்காமல், கட்டடம் இல்லாமல், எப்படி பள்ளியை நடத்துவீர்கள் என்று கேட்டது. இதுதான் நேரம் என்று காத்திருந்த எதிராளிகள் கல்வி அலுவலர்களை அழைத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். "பள்ளிக் கட்டடத்தைத்தான் இடித்து விட்டார்களே, இப்போது என்ன செய்யப் போகிறீர்கள். நாங்கள் வேண்டுமானால் மாணவர்களை கட்டட வசதி உள்ள வேறு பள்ளிகளில் சேர்க்க உதவுகிறோம்" என்று சொல்லிய கல்வி அலுவலர்களை சூழ்ந்து கொண்ட பெற்றோர்கள் "நாங்கள் எங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க விரும்பவில்லை. இங்கே கிடைக்கும் தரமான தாய்மொழிக் கல்விக்காகவே இந்தப் பள்ளியில் எங்கள் குழந்தைகளைச் சேர்த்தோம். அதனால் இந்தப் பள்ளியில்தான் எங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்போம். நாங்களே நிதி திரட்டிக் கட்டடத்தைக் கட்டிக் கொடுப்போம்." என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். செய்வதறியாது திகைத்தக் கல்வி அலுவலர்கள், அப்படியானால் உங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க விருப்பமில்லை இந்த பள்ளியில்தான் படிக்க வைப்போம் என்று எழுதிக் கொடுக்கச்சொல்லி கேட்டனர். பெற்றோர்களும் அப்படியே எழுதிக் கையொப்பம் இட்டுக் கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட கல்வி அலுவலர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
அதற்கு அடுத்த ஒரு சில நாட்களில் எதிராளிகளுக்குச் சாதகமான இயற்கை நீதிக்குப் புறம்பான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தோம். "வழிபாட்டுத் தலங்களை இடிப்பதை விடக் கொடுமையான செயலைச் செய்துள்ளார்கள். ஏழை மாணவர்கள் பயிலும் பள்ளியை இடித்துள்ளார்கள். அதற்குக் காவல்துறையினரும் முழு உடந் தையாக இருந்திருக்கிறார்கள். குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இயற்கை நீதிக்குப் புறம்பானத் தீர்ப்பை வழங்கியுள்ளார் தனி நீதிபதி. அவரது தீர்ப்பை நீக்கம் செய்து ஆணையிடுங்கள்" என்று மூத்த வழக்குரைஞர் என். ஜி. ஆர். பிரசாத் அவர்கள் வாதாடினார். அவரோடு ஒரு பெரிய வழக்குரைஞர் குழுவே பள்ளிக்குத் துணையாக நின்றது. வழக்குக் கட்டணமாக ஒரு காசுகூட வாங்கிக் கொள்ளாமல் அனைத்து வழக்குரைஞர்களும் பள்ளிக்காகத் துணை நின்றார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மற்றும் இப்ராகிம் கலிபுல்லா அமர்வு எதிராளிகளுக்குச் சாதகமான தனி நீதிபதியின் தீர்ப்பை நீக்கம் செய்தும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தித் தீர்வு காணுங்கள் என்றும் ஆணையிட்டது. இயற்கை நீதிக்குப் புறம்பானதாகவும், எதிராளிகளுக்குச் சாதகமாகவும் அளிக்கப் பட்டத் தனி நீதிபதியின் தீர்ப்பு இதன் மூலம் நீக்கம் செய்யப்பட்டது. ஓரிரு மாதங்களில் பொதுமக்களிடம் நன்கொடை திரட்டினோம். பெற்றோர்களும் திரட்டித் தந்தனர். அந்தத் தொகையில்தான் இப்போது இருக்கும் கல்நார் ஓடு வேயப்பட்டக் கட்டடத்தைக் கட்டினோம். இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தில் பாதி அளவுக்குத்தான் அதாவது 100 மாணவர்கள் படிக்கும் அளவுக்குதான் புதிய கட்டடத்தைக் கட்ட முடிந்தது. இடிக்கப்பட்ட பழைய கட்டடத்தில் 200 பேர் கல்வி பயில முடியும். பள்ளி இடிக்கப்பட்ட பிறகு, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், தோழர்கள் வந்து எமக்கு ஆறுதல் கூறியதையும் எதிராளிகளுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுப்பியதையும் மறக்க முடியாது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய பட்டினிப் போராட்டமும் நடத்தப்பட்டது.
மின் இணைப்புப் பெற பட்ட பாடு
பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டதால் மின்துறையினர் மின் இணைப்பைத் துண்டித்து விட்டனர். பள்ளிக் கட்டடத்தை மீண்டும் கட்டிய பிறகு விண்ணப்பித்தால் மீண்டும் இணைப்பு தருகிறோம் என்றனர். சரி என்று புதிய கட்டடம் கட்டிய பிறகு மின்துறையை அணுகினோம். அதற்குள் எதிராளிகள் முந்திக் கொண்டனர். மின்துறை அலுவலர்கள் சிலரை வளைத்துத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி விட்டனர். அவ்வளவு எளிதாக மீண்டும் மின் இணைப்பைப் பெற முடியவில்லை. பத்து ஆண்டுகள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர்தான் மீண்டும் மின் இணைப்புக் கிடைத்தது. மீண்டும் மின் இணைப்புப் பெறுவதற்காக அந்த நேரத்தில் ஓய்வுபெற்ற மின்பொறியாளரும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தந்தையுமான ஐயா காந்தி அவர்களின் வழிகாட்டல் எங்களுக்குப் பெருந்துணையாக அமைந்தது. அதுவரை மின்சாரம் இல்லாமல்தான் பள்ளி நடந்தது. பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்ட போது குடிநீர் கிணறும் மூடப்பட்டு விட்டதால் சாலையில் இருந்த பொதுக்குழாயில் தண்ணீர் எடுத்துதான் பள்ளிக்குப் பயன்படுத்தினோம். பின்னர் தமிழ் ஆர்வலர் ஒருவரின் பங்களிப்பால் ஆழ்துளைக் கிணறு அமைத்துப் பயன்படுத்தி வருகிறோம். அதற்குள் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஏழாவது ஆண்டு விழாவை எழுச்சியுடன் கொண்டாடினோம். ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். பள்ளி இடிக்கப்பட்ட பிறகு ஒரு காசும் வாங்கிக் கொள்ளாமல் நமக்காக சட்டப் போராட்டம் நடத்திய அனைத்து வழக்குரைஞர்களுக்கும் மக்கள் போராட்டம் நடத்திய சனநாயக சக்திகள், தமிழ் உணர்வாளர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் ஆண்டுவிழா மேடையில் சிறப்பு செய்யப்பட்டது. சிறைக்குச் சென்ற 28 பேருக்கும் "தமிழுக்காகவும் கல்விக்காகவும் சிறை சென்ற செம்மல்" எனும் விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு வழக்குகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் பெற்றோர் தருகின்ற மிகக் குறைந்த நன்கொடையைக் கொண்டும் எஞ்சிய தேவையை பொதுமக்களிடம் திரட்டியும் பள்ளியை நடத்திவருகிறோம்.
திடுமென வந்த கொரோனா நெருக்கடி
இதற்கிடையில் திடுமென வந்த கொரோனா கால நெருக்கடி எங்களுக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கிவிட்டது. ஏற்கெனவே தொடர் நெருக்கடிகளைச் சந்தித்து வந்த எங்களுக்கு கொரோனா காலத்திலும் தமிழ் உணர்வாளர்களும் சனநாயக சக்திகளும் பொதுமக்களும் தான் துணை நின்றார்கள். அவர்கள் அளித்த நன்கொடையில் தான் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கான புத்தகங்களையும் குறிப்பேடுகளையும் கட்டணம் இன்றி வழங்கினோம். ஆசிரியர்களுக்கு அரைச் சம்பளம் அளித்தோம். கொரோனா காலம் முழுக்க இலாப நோக்கத்தோடு இயங்கும் பல தனியார்ப் பள்ளிகள் குறிப்பிட்ட அளவுக்குப் பெற்றோர்களிடம் கட்டணம் பெற்றார்கள். ஆனால் நாங்கள் பெற்றோர்களிடம் எவ்விதக் கட்டணமும் வாங்காமல் முழுக்க முழுக்கப் பொதுமக்கள் அளித்த நன்கொடையைக் கொண்டுதான் சமாளித்தோம். இந்தக் காலகட்டத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பில் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டக் கொரோனா கால நிதி உதவி எங்கள் பள்ளிக்கும் கிடைத்தது. அந்த நிதியுதவியும் கொரோனா கால நெருக்கடியைச் சமாளிக்க உதவியது என்பதை இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். கொரோனா காலத்துக்குப் பிறகு பெற்றோர்கள் அளிக்கும் குறைந்த அளவு நன்கொடையைக் கொண்டும் எஞ்சிய தேவையைப் பொதுமக்களிடம் நன்கொடையாகப் பெற்றும்தான் பள்ளியை நடத்தி வருகிறோம். இவ்வளவு காலமாக வணிக நோக்கமின்றி ஒரு தமிழ்வழிப் பள்ளியை நடத்துவதற்கு நாங்கள் எதிர்கொண்ட பல்வகைப்பட்ட தொடர் நெருக்கடிகளைத்தான் மேலே விளக்கப்படுத்தியுள்ளோம். அதே நேரம் எத்தனை நெருக்கடிகள் வந்தபோதும் அவற்றையெல்லாம் மக்கள் துணையுடன் முறியடித்து கடந்து வந்திருக்கிறோம். இப்பொழுது 25 ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளி விழா ஆண்டையும் கடந்து, 27-ஆம் ஆண்டில் நிற்கிறோம்.
ஐநிலைக் கல்வி
வெள்ளிவிழா ஆண்டு முதல் ஒரு புதிய முயற்சியாக சக்தி பவுண்டேசன் நிறுவனத்துடன் இணைந்து அவர்கள் அரும்பாடு பட்டு உருவாக்கியுள்ள ஐநிலைக் கல்வி பாடத்திட்டத்தை 2 முதல் 6 அகவை உள்ள மாணவர்களுக்கு முதற்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளோம். 7 முதல் 14 அகவை வரை உள்ள மாணவர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் அறிமுகம் செய்துள்ளோம். ஐநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் நமது மரபுசார்ந்த வாழ்வியல் பயன்பாட்டுக் கருவிகளை பயன்படுத்தி குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பதாகும். ஐநிலைக் கல்வி என்பது மாண்டிசோரி முறையையும் உள்ளடக்கியதாகும். ஐம்பூதங்களின் சேர்க்கைதான் இயற்கை என்பதையும் எளிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு விளக்கப்படுத்துகிறோம். மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இதுவல்லாமல் திருக்குறள், பழமொழிகள், விடுகதைகள், பொது அறிவு ஆகியவற்றை குழந்தைகளின் அகவைக்கு ஏற்ப சொல்லித் தருகிறோம். 15-க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகளும், குணநலன், ஒழுக்க நெறி, பண்பு நெறி, அறநெறிகள் சார்ந்த பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகின்றன. குழந்தைகள் மீது குருட்டுத்தனமாக அதிகாரம் செலுத்தி வறட்டுத்தனமாக கற்பிக்கப்படும் கல்வி முறைக்கு எதிராக அவர்களுக்கு விளையாடவும் ஆடவும் பாடவும் சுதந்திரமான சூழ்நிலையை உருவாக்கித் தந்து உதவுகிறோம். அதற்காக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கிறோம். ஐநிலைக் கல்வி பாடத்திட்டக் குழுவின் சார்பில் சக்தி பவுண்டேசன் நிறுவனத்தின் ஐயா மாதேசுவரன் அவர்கள், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து உதவுகிறார். ஐநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்குக் கற்பிக்கத் தேவையான அனைத்துத் துணைக் கருவிகளையும் சக்தி பவுண்டேசன் நிறுவனத்தினர் வழங்கி உள்ளனர் என்பதையும் மகிழ்வுடன் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். தாய்த்தமிழ் பள்ளிகளின் கூட்டமைப்பான தாய்த்தமிழ்க் கல்விப்பணி சார்பில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சியும் ஆசிரியர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. அடிக்கடி பெற்றோர்-ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர், ஆசிரியர் ஆகிய இரு தரப்பினரின் கூட்டு உழைப்பின் தேவையை விளக்கப்படுத்துகிறோம். இப்படி, இத்தனை ஆண்டுகளாக பெரும் போராட்டத்துடன் தொடர்கிறது, நமது வணிக நோக்கமில்லாத தாய்மொழிக் கல்விப் பணி. இந்நாள்வரை பெரும்பாடுபட்டு மக்கள் துணையுடன் நடத்தப்பட்டு வரும் நமது பள்ளியைத் தொடர்ந்து வளர்த்தெடுத்து நடத்தப்பட வேண்டிய தேவை முன்னிலும் அதிகமாக உள்ளது என உணர்கிறோம். அதாவது நாம் பள்ளி தொடங்கிய காலத்தில் இருந்ததை விட இன்று மிகப்பெரும் அளவுக்குக் கல்வி வணிகமயம் ஆகிவிட்டது. மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நிலையிலிருந்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வரை தனியார் கல்வி நிறுவனங்களில் ஆயிரக் கணக்கான ரூபாயிலிருந்து இலட்சக் கணக்கான ரூபாய்வரை செலவழிக்க வேண்டி இருக்கிறது. மதிப்பெண் அடிப்படையிலானக் கல்விமுறை, மாணவர்கள் மீது பெரும் மன அழுத்தத்தை உருவாக்கி இருக்கிறது. இன்னொரு பக்கம், தாய்மொழிக் கல்வியை வழங்கிய அரசுப் பள்ளிகளில் கணிசமானவை இன்று ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றப்பட்டுவிட்டன. மக்களிடம் இதுதான் சமூக வளர்ச்சிக்கான கல்வி முறை எனும் மூடநம்பிக்கை வளர்க்கப்பட்டுள்ளது. உலகில் கல்வியில் சிறந்து விளங்கும் முதல் 20 நாடுகளில் ஒன்று கூடத் தங்கள் மாணவர்களுக்கு அந்நிய மொழியில் கல்வி வழங்கவில்லை. அதேபோல பள்ளிக் கல்வியை கருவாடு விற்பது போல விற்க அனுமதிக்கவில்லை. ஏழை பணக்காரன் என்கிற வேறுபாடு இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் அரசே கட்டணம் இல்லாத தாய்மொழிக் கல்வியை வழங்கி வருகிறது. அதேபோல மக்கள் மகிழ்ச்சியாக வாழும் முதல் 10 நாடுகளும் கல்வியை வணிக நோக்கம் இல்லாமல் தாய்மொழியில் வழங்கும் நாடுகளே! உலக நிலைமை இவ்வாறு இருக்க நாம் மட்டும் அந்நிய மொழியான ஆங்கில மொழியில் கல்வி கற்றால் தான், அறிவும் ஆற்றலும் வளரும் என்று நம்புகிறோமே. இது மூடநம்பிக்கை இல்லாமல் வேறென்ன?
சிறந்த கல்வி அமைப்பைக் கொண்ட நாடுகள்
1. பின்லாந்து, 2. ஸ்விட்சர்லாந்து, 3. நார்வே, 4. ஸ்வீடன், 5. நெதர்லாந்து, 6. டென்மார்க், 7. அயர்லாந்து, 8. ஜப்பான், 9. சிங்கப்பூர், 10. இஸ்ரேல், 11. ஜெர்மனி, 12. இத்தாலி, 13. ஐஸ்லாந்து, 14. நியூசிலாந்து, 15. ஆஸ்திரேலியா, 16. வட அமெரிக்கா, 17. தென்கொரியா, 18. பெல்ஜியம், 19. சீனா, 20. ஸ்லோவேனியா
மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள்
1. பின்லாந்து, 2. டென்மார்க், 3. ஐஸ்லாந்து, 4. ஸ்விட்சர்லாந்து, 5. நெதர்லாந்து, 6. லக்ஸ்ம்பர்க், 7. ஸ்வீடன், 8. நார்வே, 9. ஆஸ்திரேலியா, 10. நியூசிலாந்து
எனவே தான் சொல்கிறோம் மக்களுக்குச் சரியானக் கல்வி எது என்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டவும், மனப்பாடம் செய்யாமல் வாழ்க்கைக்கானக் கல்வியை செயல்வழியில் கற்கும் கல்விமுறையை மாணவர்களுக்கு அளித்து ஊக்க உணர்வு ஊட்டவும் முன்மாதிரியாக நம் பாவாணர் பள்ளியின் தேவை முன்பைவிட அதிக முதன்மை பெறுகிறது என்று. ஆம், நம் பாவாணர் பள்ளியை வணிக நோக்கம் இல்லாமல் தொடர்ந்து நடத்த வேண்டும். முற்றிலும் வணிகமயமான உலகத்தில்! இதுதான் முரண்பாடு!
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.", என்று வள்ளுவர் சொல்வதுபோல நாம் எவ்வளவு சிறந்த செயலை மக்களுக்காக வணிக நோக்கம் இல்லாமல் செய்தாலும் அதற்கும் இங்கே பொருள் தேவைப்படுகிறது. பணம் தேவைப்படுகிறது. பணம் இல்லாமல் இங்கே ஒரு கடுகளவு செயலையும் நம்மால் செய்ய முடியாது.
இந்த முரண்பாட்டை எப்படிக் களைவது?
ஒருபக்கம் பள்ளி நடத்தப்படும் இடம் சார்ந்த சிக்கல். இன்னொரு பக்கம் ஆசிரியர்கள் பணியாளர்களுக்கான சம்பளம், மின் கட்டணம், புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் இன்னபிற தேவைகள்! இதற்கானப் பொருளாதாரத்தை எங்கிருந்து எங்களால் பெற முடியும்? கண்டிப்பாக, பாவாணர் பள்ளியில் குழந்தைகளைப் படிக்கவைக்கும் ஏழைப் பெற்றோர்களிடமிருந்து அவ்வளவு தொகையைப் பெற முடியாது. எப்போதும் போல பொதுச் சமூகத்திடம் இருந்துதான் இந்தப்பொருள் தேவையை நிறைவு செய்ய முடியும்.
எனவே, இனிவரும் காலங்களில்
பாவாணர் பள்ளி எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை விரிவான மக்கள் திரளிடம் எடுத்துச் சொல்லி ஒரு பெரும்நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளோம். அந்த நிதி இத்தனை ஆண்டுகளாக எப்படி முழுக்க முழுக்க ஒரு முன் மாதிரி பள்ளியை சிறப்பாக நடத்தினோமோ அப்படி இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பள்ளியை வணிக நோக்கம் இல்லாத தாய்மொழிவழிப் பள்ளியாக நடத்துவதற்குப் பயன்படும் என உறுதி அளிக்கிறோம். அதே நேரம் தொடக்கப்பள்ளி நிலையிலிருந்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியாகவும் காலமும் சூழலும் இடம் கொடுக்குமானால் கல்லூரி வரையில் கூட வளர்த்தெடுக்க உறுதி கொண்டுள்ளோம்.
எனவே நல்லுள்ளம் கொண்ட நல்லோர்களே! நீங்கள் மனது வைத்தால் ஏழை மாணவர்களுக்கு வணிக நோக்கம் இல்லாமல் தாய்மொழி வழியாகச் செயல்வழியில் கல்வி வழங்கும் பாவாணர் பள்ளியை பாதுகாக்க முடியும்! வளர்த்தெடுக்க முடியும்!
திட்டமிடலும் தேவையும்
அறம் சார்ந்த ஐந்து
மாணவர்களின் பல்வகைத் திறன்களை வளர்க்கவும் குணம் மற்றும் பண்பு நலன்களை மேம்படுத்தவும் ஒழுக்கம் மற்றும் அறநெறிகளை சீர்ப்படுத்தவும் ஒரு சிறந்த பாடத்திட்டத்தை வளர்த்தெடுத்தல்.
தமிழ் மொழியில் புதைந்து கிடக்கும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய விழுமியங்கள் அனைத்தையும் நிகழ்கால, எதிர்காலத் தலைமுறையினருக்கு மீட்டுக் கொடுத்தல்; அதற்கானத் தமிழ்ப் பணிகள்.
நம் தனித்துவத்தை இழக்காமல் உலகோடு ஓட்ட ஒழுகும் ஒரு சிறந்த புதிய சமூகத்தை எதிர்காலத்தில் கட்டியமைக்கும் சிற்பிகளாக மாணவர்களை வளர்த்தெடுத்தல்.
புதிய உலகில் மரபு சார்ந்த, இயற்கை சார்ந்த, நவீன அறிவியல் சார்ந்த புதிய கல்வி குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடம் உருவாக்குதல். அதற்குத் தொடர்ந்து கலந்துரையாடல்களை நிகழ்த்துதல்.
மொத்தத்தில் கசடறக் கற்பதும், கற்றபடி நடப்பதுமே கல்வி என்று வள்ளுவர் காட்டும் வழியில் பீடு நடையிட மாணவர்களையும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்துதல்!
பொருள் சார்ந்த ஐந்து
நிகழ்காலத்தில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நிலையிலிருந்து உடனடியாக எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்குத் தேவையான இடவசதியை உருவாக்கவும், உறுதிப்படுத்தவும்.
எதிர்காலத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியாக மட்டுமல்லாமல் காலமும் சூழலும் இடம் கொடுத்தால் கல்லூரிக் கல்வி வரை தரம் உயர்த்தவும்.
மரபு சார்ந்த, இயற்கை சார்ந்த நிலையில் நவீன அறிவியல் சார்ந்த நிலையை இணைத்து உருவாக்கப்படும் புதிய முழுமையானக் கல்விமுறையைக் கற்பிக்க ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும்.
எழுதுபொருள்கள், புத்தகப் பைகள் உள்ளிட்ட கற்றல் கருவிகள் மற்றும் சீருடைகளை விலையின்றி வழங்குவதோடு ஏழை மாணவர்களுக்கு முழுமையான கட்டணமில்லாக் கல்வி வழங்கவும்.
மாணவர்களுக்குக் காலை மற்றும் பகல் உணவை விலையின்றி வழங்கவும், தேவையான நிதியைப் பொதுச் சமூகத்திடம் திரட்டுதல்.
அன்புத் தமிழ் நன்றிகள்!
நாம் 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளியை தொடங்கிய பொழுது அந்த முதலாண்டிலிருந்து இவ்வளவு காலமாக, நமது பள்ளியில் தமது குழந்தைகளைச் சேர்ந்த பெற்றோர்களுக்கும் இங்கு பயின்று சென்ற மாணவர்களுக்கும் அன்று முதல் இன்று வரை அறவழியிலும் பொருளாதார வழியிலும் துணை நிற்கும் தமிழ் உணர்வாளர்கள், சனநாயக சக்திகள், பொதுநல உணர்வாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கும் முதல் ஆண்டிலிருந்து இத்தனை ஆண்டுகளாக மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டும், சம்பளம் வாங்காமலும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பெரும் உழைப்பைச் செலுத்தி மாணவர்களுக்கு சிறந்த கல்வியைக் கற்பித்த – கற்பித்துக் கொண்டிருக்கிற அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்ட காலத்தில் துணிவோடு போராடி, தாய்த்தமிழ்க் கல்விகாக்கச் சிறை சென்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழ் உணர்வார்களுக்கும் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்ட காலத்திலும் அதற்கு பின்பும் கட்டணம் ஏதும் வாங்கிக் கொள்ளாமலும் மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக் கொண்டும் நமது பள்ளிக்காக சட்டப் போராட்டம் நடத்துவதற்கு உதவுகின்ற வழக்குரைஞர்களுக்கும், கொரோனா நெருக்கடி காலத்தில் நிதி தந்தும், நிதிதிரட்டித் தந்தும் பள்ளியைக் காத்த அன்புள்ளங்களுக்கும், பள்ளி தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை பாடத் திட்டங்களை உருவாக்குவதிலும் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளை அளிப்பதிலும் நமது பள்ளிக்கு இக்கட்டுகள் நேர்கின்ற பொழுதெல்லாம் அது தமது பள்ளிக்கு நேர்ந்த இக்கட்டாகக் கருதி துணை நிற்கின்ற தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் கூட்டமைப்பில் உறுப்பாண்மை வகிக்கும் தாய்த்தமிழ் பள்ளிகளின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் கட்டணமே பெற்றுக் கொள்ளாமல் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து உதவிய கல்வியாளர்களுக்கும், ஐநிலைக் கல்வி பாடத்திட்டத்தையும், பாடத்துணைக் கருவிகளையும் வழங்கியதோடு தொடர்ந்து ஆசிரியப் பயிற்சியும் அளித்துவரும் ‘சக்தி பவுண்டேசன்' நிறுவனத்தாருக்கும், நாம் பள்ளியை நடத்துவதற்கு ஆகிய மொத்தச் செலவில் பெற்றோர்கள் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட நன்கொடை 25 விழுக்காடு என்றாலும் மீத 75 விழுக்காடு செலவுத் தொகையினை இத்தனை ஆண்டுகளாக நன்கொடையாக வழங்கிய தமிழ் உணர்வாளர்களுக்கும் பொதுநல உணர்வாளர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த அன்புத் தமிழ் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.