அறக்கட்டளை
பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளை (பதிவு எண் 117/2004) வழியாக பள்ளி நடத்தப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் நோக்கம் செயல்பாடுகள் முழுவதும் சமூகநல நோக்கமுடையது. இலாப நோக்கமுடையது அல்ல. அறக்கட்டளைக்கு வருமான வரித்துறையின் 80G வரி விலக்குச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அறங்காவலர்களாக இருப்பவர்கள் அனைவரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ சமூக நலப்பணிகளில் ஈடுபடுபவர்கள்.
பொதுத் திட்டம்
பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாக மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இப்போது கல்வி வழங்க முடிகிறது. இனிவரும் ஆண்டுகளில் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த இலக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூழலும் வாய்ப்பும் அமையும் போது கல்லூரி தொடங்கவும் திட்டம் உள்ளது.
தமிழ் மற்றும் தாய்மொழிக் கல்விக்கான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை உருவாக்குவது, நம் மரபுசார்ந்த இயற்கை அறிவியல், இயற்கை வேளாண்மை, ஆகியவற்றை நவீன அறிவியலோடு உள்ளடக்கிய முன்மாதிரிப் பாடத்திட்டத்தை மேம்படுத்துவது.
தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலவும் ஆராய்ச்சிகளில் ஈடுபட துணை செய்வது, அதற்கு இசைவான அனைத்து வகை உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவது.
ஈராண்டுத் திட்டம் (உடனடித் திட்டம்)
பள்ளிக்கு சொந்த இடம் வாங்குவது.
எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்துவது.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது.
மாணவர்கள் விரும்பும் இசைப் பயிற்சிகளை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வது.
விளையாட்டு, உடற்பயிற்சிகளுக்குத் தனிக் கவனம் செலுத்தி அதற்கான கருவிகள், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது.
மாணவர்களுக்கான ‘டிஜிட்டல்’ நூலகம் அமைப்பது.
மரபு மற்றும் நவீன அறிவியலைக் கற்றுக் கொள்ள அறிவியல் கூடம், அறிவியல் களம் அமைப்பது.
செயல்வழிக் கற்றலுக்கு உதவும் வகையில் மாணவர்களை வெளியிடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வதற்காக போக்குவரத்து ஊர்தி வாங்குவது (மூடுந்து / சிற்றுந்து).
மாணவர்களுக்கு இயற்கைவழி வேளாண் பொருட்களைக் கொண்டு காலை - பகல் உணவு மற்றும் மாலை நொறுவைத்தீனி வழங்குவது.
தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலவும் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் துணை செய்வது.
பெற்றோர்களும் பெரியவர்களும் குழந்தைகளுடன் கற்றலில் துணை செய்வதற்காக தொடர் கலந்துரையாடல்களை நடத்துவது. அதற்கெனத் தனி அமைப்பு வடிவம் ஒன்றை உருவாக்குவது.
5 ஆண்டுத் திட்டம்
10 ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்துதல்.
உண்டு உறைவிடப் பள்ளியாகத் தரம் உயர்த்துதல்.
மாணவர்கள் தாய்மொழியில் சுதந்திரமாகவும் செயல்வழியிலும் கற்பதற்குத் துணைநிற்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியப் பயிற்சி மையம் உருவாக்குதல்.
10 ஆண்டுத் திட்டம்
மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது.
தமிழ்வழியிலும், செயல்வழியிலும், மரபும் நவீனமும் இணைந்தவழியில் கற்பதற்குத் துணை செய்யும் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவது.
உடனடி அறைகூவல்கள் (சவால்கள்)
பள்ளிக்குச் சொந்த இடம் இல்லாததுதான் பெரிய இடர்ப்பாடாக இருக்கிறது. பள்ளிக்குச் சொந்த இடம் வாங்குவதும், போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும்தான், முதல் பெருந் தேவையாகவும் இருக்கிறது.
ஆசிரியர்களுக்கான போதிய மாதச் சம்பளம் அளிப்பது, அடுத்த இடர்ப்பாடு. மூன்றில் இரண்டு பங்கு மாணவர்களின் பெற்றோர்களால் ஓராண்டுக் கட்டணத்தில் (ஓராண்டுக்கு ஒரு மாணவருக்கு ஆகும் செலவில்) பாதிதான் கட்ட முடிகிறது. அதனால் ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களுக்குப் போதிய சம்பளம் வழங்குவதில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.